யாதும் ஊரே யாவரும் கேளிர்
இது என்னுடைய முதல் தமிழ் கட்டுரை. பிழை ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும்!
தமிழில் கட்டுரை எழுதுவது திருப்திகரமாக உள்ளது. இந்த கட்டுரையில் என்னுடைய கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த கட்டுரையின் தலைப்பு ஐநா சபையில் ஐயா அப்துல் கலாம் அவர்கள் கூறிய வார்த்தைகள். முதலில் கணியன் பூங்குன்றனார் அவர்களால் கூறப்பட்டது.
பிறப்பால் சாதி மதம் இனம் என்ற வேறுபாடு இருக்கக்கூடாது என்று மகாத்மா அவர்கள், டாக்டர் அம்பேத்கர் அவர்கள் போன்ற மகான்கள் பலமுறை மக்களுக்கு எடுத்துக்கூறினார்கள். அந்த உண்மை கருத்துக்களை தமிழர்களாகிய நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். அமெரிக்காவில் பிறந்தாலும் ஆப்ரிக்காவில் பிறந்தாலும் சீனாவில் பிறந்தாலும் நாம் அனைவரும் மனித இனத்தை சேர்ந்தவர்கள். மனித இனம் அனைவரும் சமமானவர்களே. சில சமயங்களில் பிறப்பால்தான் நாம் தமிழர் என்பதை மறந்துவிடுகிறோம்.
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு
பலதரப்பட்ட மக்கள் தமிழ்நாட்டில் வசிக்கின்றனர். இனம் மொழி மத வேறுபாடின்றி தமிழ்நாட்டில் அமைதியாக வாழலாம். தமிழ்நாடு முன்னேறியதற்கு முக்கியகாரணம் இது. எந்த ஒரு சமுதாயம் எல்லாவித மக்களையும் கொண்டுள்ளோதோ அந்த சமுதாயம் எளிதில் முன்னேறிவிடும். அதற்கு உதாரணம் தமிழ்நாடு. தமிழ்நாடு முன்னேறியதற்கு எந்த தனி நபரோ அல்லது கட்சியோ காரணம் அல்ல. அதற்கு முழு காரணம் தமிழ் மக்கள். பிற இனத்தவரை நம்மில் ஒருத்தராக ஏற்றுக்கொள்வது நம்முடைய வழக்கம். அது தான் நம்முடைய பலம்.
அப்போ தமிழர் எப்படி முன்னேறுவது
“தமிழனை பிறமொழி மக்கள் ஏமாற்றுகின்றனர்.”
“தமிழர்கள் எங்கு சென்றாலும் கட்டப்படுகின்றனர்.”
“தமிழர்களுக்கு சலுகைகள் கிடைப்பது இல்லை”
“தமிழ்நாட்டிலேயே தமிழர் கட்டப்படுகின்றனர்”
“தமிழ் மொழியை மற்ற மொழியினர் அழிக்க நினைக்கிறார்கள்”
மேலே குறிப்பிட்டுள்ள வாக்கியங்கள் அரசியல்வாதிகள் அதிகம் பயன்படுத்துவது. அது உண்மை என்றால் அதை தடுப்பதற்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பதே சரியான கேள்வி. என்ன செய்தால் இந்த பிரச்னையை சரிசெய்யலாம்?
தமிழ் மொழியை தமிழரை தவிர வேறுயாராலும் அழிக்க முடியாது.
இதுவே உண்மை! நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு தமிழ் கற்றுக்கொடுத்தால் மட்டுமே தமிழை காப்பாற்ற முடியும். என் பிள்ளைக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும் என்று பெருமிதத்தோடு சொல்லும் பெற்றோர் ஏராளம். தமிழை தொழில்நுட்ப மொழியாக உலகிற்கு கொண்டுசெல்ல வேண்டும். கண்டிப்பாக அது எளிதான காரியம் அல்ல. நாம் நினைத்தால் தமிழை காப்பாற்ற முடியும்.
தமிழர்கள் உயர்பதவியில் உயர்கல்வியிலும் சிறந்து விளங்குவதே சரியான வழி. தமிழர்கள் தான் தமிழர்க்கு உதவ வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகும் மாணவ மாணவிகள் மிகவும் குறைவு. அதே போன்று ஐஐடி தேர்வாகும் மாணவ செல்வங்களும் குறைவு. ஐஐடி மாணவர்கள் மற்றும் ஐஏஎஸ் தான் சிறந்தவர்கள் என்று கூறவில்லை. அதிலும் தமிழர் பங்கேற்க வேண்டும் என்பதே என்னுடைய வாதம். கீழே உள்ள செய்திகள் தமிழ்நாட்டின் தற்போதைய தரவரிசையை பட்டியலிடுகின்றன.
தமிழ்நாடு தனிமை படுத்தப்படுகிறதா?
இதற்கு என்னுடைய விடை “இருக்கலாம்”. தனிமை படுத்துவதை தடுப்பதற்கு தமிழர்கள் மேலே கூறியது போன்று அனைத்திலும் பங்கேற்க வேண்டும். நம் தமிழர்கள் நாட்டின் முக்கிய பதவியில் இருந்தால் நமக்கு கண்டிப்பாக நல்லது நடக்கும். நான் பதவி என்று கூறுவது அரசியல் பதவி அல்ல நாட்டை நடத்தும் உயரதிகாரிகள், அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள்.
முடிவுரை
மற்ற இனத்தவரை வெறுப்பதில் நமக்கு எந்த பயனும் இல்லை. நாம் நமக்கு தேவையானதை உரிய முறையில் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். இறுதியில் நாம் அனைவரும் மனிதர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. அனைவரும் ஒன்றாக வாழ்வதே நல்ல வாழ்க்கை. எல்லோருக்கும் இது புரிவதில்லை. தமிழர்களாகிய நாம் ஒரு முன்னுதாரணமாக இருந்து இந்த உலகத்துக்கு கற்று கொடுப்போம்
நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் அல்ல. தமிழ்நாடும், தமிழும் பூமி இருக்கும்வரை வாழவேண்டும். தமிழ் வாழ்க!
படித்தது பிடித்திருந்தால் தயவு கூர்ந்து இந்த கட்டுரைக்கு கைத்தட்டவும்
வரவுகளை